மகாவலி L வலய காணிப் பிரச்சினை தொடர்பில் சர்ச்சை

மகாவலி L வலய காணிப் பிரச்சினை தொடர்பில் சர்ச்சை

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2020 | 7:46 pm

Colombo (News 1st) மகாவலி L வலய காணிப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் நேற்று (05) பாராளுமன்றத்தில் கூறிய கருத்து தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அப்பகுதி விவசாயிகள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

மகாவலி L வலயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று கேள்வி எழுப்பியதுடன், அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்திருந்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1984 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக தமிழ் மக்கள் வௌியேற்றப்பட்டு 1988 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் மகாவலி L வலயம் அறிவிக்கப்பட்டு, தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டு, அதனை சிங்கள
பெயர்களாக மாற்றி தென்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டதை பிரதமர் அறிவாரா என சார்ள் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பயன்படுத்தி தற்போது சிங்கள மக்கள் பயன்படுத்துவதாகக் கூறுப்படும் காணிகளுக்கு பதிலாக மாற்றுக்காணிகளை வழங்குவதற்கு அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் விசேட முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், காணிக் கச்சேரி மூலம் அவர்களை தெரிவு செய்வதற்கான பெயர்ப்பட்டியலை அனுப்பி வைக்குமாறு 17.07.2019 இல் அதிகார சபை முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ள போதிலும் இது வரை அந்த பட்டியல் அதிகார சபைக்கு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

பிரதமர் கூறிய கருத்து முற்றிலும் சரியானது எனவும் மகாவலி L வலய காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை மக்களுக்கு வழங்குவதற்கு காணிக் கச்சேரியை நடத்துவதற்கு விவசாயிகள் விரும்பாமையினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்
கூறினார்.

மகாவலி அதிகார சபையின் அதிகாரத்திற்குள் செல்வதற்கு மக்கள் விரும்பவில்லையெனவும் காணிகளை பிரதேச செயலகத்தின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருமாறு அவர்கள் கோருவதனாலும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்