ஜனாதிபதி செயலக முன்றலில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

ஜனாதிபதி செயலக முன்றலில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2020 | 8:35 pm

Colombo (News 1st) அரச நிறுவனங்களின் ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இன்றும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி செயலக முன்றலில் அதிகளவிலான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்படும் டெங்கு ஒழிப்பு உதவி அதிகாரிகள், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள், அமைச்சுக்களின் திட்ட உதவியாளர்கள், அகில இலங்கை ஓய்வு பெற்றோர் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் கம்பஹா சனச அபிவிருத்தி வங்கியின் வைப்பீட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

ஓய்வூதிய சம்பளத்தை துரிதமாக வழங்குதல், தொழிலை இழந்தவர்களை மீளவும் சேவையில் அமர்த்துதல் போன்ற சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததை அடுத்து, தொழில்வாய்ப்பை இழந்த தம்மை மீளவும் சேவையில் இணைக்குமாறு கோரி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நாளாந்த அடிப்படையில் சேவையாற்றிய ஊழியர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி செயலக முன்றலுக்கு எட்டாவது நாளாகவும் அவர்கள் வருகை தந்திருந்தனர்.

அகில இலங்கை பயிற்சித்திட்ட உதவியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், தம்மை தொழிலில் இணைக்கவில்லை என இவர்கள் கூறினர்.

முப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி செயலக முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறைக்கப்பட்ட ஓய்வூதிய சம்பளத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, கம்பஹா சனச அபிவிருத்தி வங்கியின் வைப்பாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூதிய சம்பளத்தை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்க உறுப்பினர்கள் கோட்டை ரயில் நிலைய முன்றலில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை பயணித்தனர்.

சேவையில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமை தொடர்பிலேயே அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

பின்னர், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி வீதியை மறித்து இன்று மாலை எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவினர் இன்று மாலை அங்கு வருகை தந்திருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு, ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்