குழந்தையொன்று பிறந்து 30 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பரிதாபம்

குழந்தையொன்று பிறந்து 30 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பரிதாபம்

குழந்தையொன்று பிறந்து 30 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பரிதாபம்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2020 | 12:54 pm

Colombo (News 1st) சீனாவின் வுஹான் நகரில் பிறந்து 30 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிசுவொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வுஹான் வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி சிசு பிறந்துள்ளதுடன் பிரசவத்திற்கு முன்னர் சிசுவின் தாயார் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.

எனினும் சிசுவுக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் கண்டறியப்படவில்லை.

சிசு தற்போது கண்காணிப்பில் உள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு 675 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

வைரஸ் பரவல் தொடர்பான ஆரம்பநிலை மற்றும் பதில் நடவடிக்கைகளுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இந்தத் தொகை தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெடுப்பில் சர்வதேச பயணத்தடைகள், வர்த்தகத் தடைகள் என்பன அவசியமற்றவை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் நேற்றைய நாளில் மாத்திரம் 73 பேர் உயிரிழந்துள்ளதுடன் வைரஸ் தொற்றுக்குள்ளான 3,694 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,018 ஆக அதிகரித்துள்ளது.

14,314 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருவதுடன் அவர்களில் 2,328 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக சீன சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் 25 நாடுகளில் பரவியுள்ளதுடன் சுமார் 191 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, சீனாவிலிருந்து வருகை தருபவர்களை 14 நாட்கள் கண்காணிப்பில் வைப்பதற்கு ஹொங்கொங் நடவடிக்கை எடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்