2000-இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் நிறைந்த ஜனாதிபதி செயலக முன்றல்

by Staff Writer 05-02-2020 | 8:55 PM
Colombo (News 1st) பல்வேறு விடயங்களை முன்வைத்து நடைபெற்ற மூன்று ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஜனாதிபதி செயலக முன்றலில் இன்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2000-இற்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நாளாந்த அடிப்படையில் சேவையாற்றிய ஊழியர்கள் மற்றும் பயிற்சித் திட்ட உதவியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை மீண்டும் உயர் கல்வி அமைச்சின் பொறுப்பில் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலக முன்றலில் 1500-க்கும் அதிக மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். விகாரமாதேவி பூங்காவிற்கு அருகில் இருந்து பேரணியாக சென்றவர்கள், மஹபொல கொடுப்பனவை அதிகரித்தல், HND மாணவர்கள் பட்டப்படிப்பு வரை கல்விகற்கும் உரிமையை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். சில மணித்தியாலங்களாக ஜனாதிபதி செயலக முன்றலில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களில் சிலரை ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், தீர்வின்றி ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது. இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நாளாந்த அடிப்படையில் சேவையாற்றிய ஊழியர்கள் சிலர் தமக்கு மீளவும் தொழில் வாய்ப்பை வழங்குமாறு கோரி எதிர்ப்பில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலக முன்றலுக்கு ஏழாவது நாளாகவும் இவர்கள் இன்று வருகை தந்திருந்தனர். இன்றைய தினம் தீர்வை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்தமையால் எதிர்ப்பில் ஈடுபட்டனர். பயிற்சித் திட்ட உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட போதிலும், தொழிலில் இணைத்துக்கொள்ளப்படாதமையினால் மற்றுமொரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலக முன்றல் ஆர்ப்பாட்டக்காரர்களினால் நிரம்பிக் காணப்பட்ட போதிலும், காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஏனைய செய்திகள்