முறிகள் மோசடி விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெறவில்லை: அஜித் நிவாட் கப்ரால் குற்றச்சாட்டு

by Bella Dalima 05-02-2020 | 9:51 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முறிகள் மோசடிகள் தொடர்பில் இடம்பெற்ற தடயவியல் கணக்காய்வு உள்ளிட்ட எந்தவொரு விசாரணையும் சுயாதீனமாக இடம்பெறவில்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகருமான அஜித் நிவாட் கப்ரால் இன்று தெரிவித்தார். முறிகள் கொடுக்கல் வாங்கலின் போது திட்டமிட்டபடி குற்றம் இழைக்கப்பட்டுள்ளமையினால், அது தொடர்பில் பொலிஸார் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் வலியுறுத்தினார். இதன்போது, தமது குடும்ப உறுப்பினர்களை உயர் பதவிகளுக்கு நியமித்தமை தொடர்பில் அஜித் நிவாட் கப்ரால் கருத்துத் தெரிவித்தார்.
எனது குடும்பத்தின் உறுப்பினர்கள் இருந்துள்ளதாக தடயவியல் கணக்கு அறிக்கையில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நான் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தமைக்காக அவர்கள் அந்த பதவிகளுக்கு நியமிக்கப்படவில்லை. நிஹால் பொன்சேகா என்பவர் வங்கித்துறையில் இருந்த ஓர் நிபுணத்துவம் பெற்றவர். DFCC வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளராக அவர் இருந்தார். அமல் கப்ரால் ஹட்டன் நெஷனல் வங்கியின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவ்வாறு கூறியே குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். எனினும், நான் அவர்களுடன் தொடர்புபடவில்லை. அத்துடன், சிவானி தம்பையா , ரேணுகா குழும ஹோட்டலில் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்தார். சுனில் விஜேசிங்க எனது மனைவியின் அண்ணராவார். அவர் NDB வங்கியின் தலைவராக இருந்தார். ரணில் விஜேசிங்க இலங்கை வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவராவார். தாரா விஜேதிலக்க எனது மனைவியின் சகோதரியாவார். அவர் சம்பத் வங்கியில் இருந்தமைக்காகவே குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். எனது மகனான சத்துர கப்ரால் Vallibel Power மற்றும் Fortress ஆகியவற்றின் சபையில் இருந்தார். தம்மிக பெரேராவுடன் ஒருவர் இந்த தடயவியல் கணக்காய்வை மேற்கொள்கின்றார். எனது சகோதரி சிரோமி விக்ரமசிங்க பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் இருந்தமைக்காக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். 2015 மார்ச் 8 ஆம் திகதி இந்த குளறுபடி தொடர்பில் முதன் முதலாக அவர் அறிந்த போது அவர் அங்கிருந்து இராஜினா செய்தார். அவ்வாறு நேர்மையான முறையில் அவர் செயற்பட்டுள்ளார். ஒரு சதம் கூட பெறவில்லை. எனது மனைவியான சிரோனி கப்ரால் லங்கா ஹொஸ்பிட்டலில் பிரதி தலைவராக இருந்தமைக்காக அதனையும் குறிப்பிட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். ரவி தம்பையா ரேணுகா ஹோட்டலின் தலைவராக இருந்தார். எனது குடும்பம் தொடர்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அத்துடன் எனது குடும்பத்தினர் தொழில் ரீதியாக அதற்கு தகைமை பெற்றவர்கள்.
என அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டார். அவர் இவ்வாறு கூறிய போதிலும், தனது உறவினர்களை தனிப்பட்ட தேவைகளுக்காக அந்த பதவிகளுக்கு நிறுத்தினாரா, இல்லையா என்பது விரைவில் வெளிவரும். இதேவேளை, கணக்காய்வு அறிக்கை மேற்கொண்ட நிறுவனங்கள் தொடர்பிலும் அஜித் நிவாட் கப்ரால் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.
கணக்காய்வு செய்த KPMG இந்தியா தொடர்பில் ஆராய்ந்து பாருங்கள். BDO இந்தியா தொடர்பிலும் ஆராய்ந்து பாருங்கள். இவர்கள் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர்கள் செய்துள்ள மோசடிகள் தொடர்பில் ஆராய்ந்து பாருங்கள். இவ்வாறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பின்புலத்தில், மத்திய வங்கி தொடர்பில் ஆராய்வதற்கான பொறுப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டது. இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு இவர்களுக்கு உள்ளது. அத்துடன், KPMG-யை ஐந்து வருடங்களுக்கு தடை செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் அந்த நிறுவனத்தை தடை செய்யும் போது இலங்கை மத்திய வங்கி அவர்களை நியமித்து அந்த அறிக்கையின் படி செயற்படுவதனை நாம் காண்கின்றோம். ஆகவே, இதன் முழுமையான பொறுப்பை பொலிஸாருக்கு வழங்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு.
என கப்ரால் தெரிவித்தார். அஜித் நிவாட் கப்ரால் எதனைக் கூறினாலும் இந்த கணக்காய்வை மேற்கொண்ட நிறுவனங்கள் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டு மக்களின் பணம் கொள்ளையிடப்பட்ட போது நியூஸ்ஃபெஸ்ட் அது தொடர்பில் தகவல்கள் வெளியிட்ட போதும் சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். எனினும், அதனை நியூஸ்ஃபெஸ்ட் கருதிற்கொள்ளாமல் கொள்ளைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் வரை தகவல்கள் வெளியிட்டது. இவ்வாறு ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கப்ரால் போன்றவர்கள் அச்சுறுத்தல் விடுத்தாலும் தொலைக்காட்சி அலைவரிசை என்ற வகையில், மக்களின் பணம் சூறையாடப்படும் போது அது தொடர்பில் தகவல்களை வெளியிட நியூஸ்ஃபெஸ்ட் ஒருபோதும் பின் நிற்காது.