ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

by Staff Writer 05-02-2020 | 12:08 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேவேளை, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்பிணை நிபந்தனைகளுடன் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தாக்கல் செய்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரட்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சந்தேகநபரான ஹேமசிறி பெர்னாண்டோவை இரண்டரை இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிப்பதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (05) உத்தரவு பிறப்பித்துள்ளார். 2 பிணையாளர்களும் கொழும்பில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனையும் விதித்திருந்தது. இதனைத்தவிர, மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் முன்னிலையில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் அல்லது அழுத்தம் கொடுக்கும் வகையில் விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிட்ட நீதவான், ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு வெளிநாடு செல்லவும் தடை விதித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் 4 மாதங்களுக்கும் அதிக காலம், விளக்கமறியலில் வைக்கப்பட்டதால் அவருக்கு பிணை வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹேமசிறி பெர்னாண்டோவை பிணையில் விடுவிப்பதற்கு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்த போதிலும் அதனை இரத்து செய்யுமாறு சட்ட மா அதிபர் மீள்திருத்த விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார். இதனை ஆராய்ந்ததன் பின்னரே கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல், ஹேமசிறி பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.