மின்விநியோகத் தடை குறித்து அறிக்கை கோரல்

முன்னறிவித்தலின்றிய மின்விநியோகத் தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

by Staff Writer 05-02-2020 | 7:30 AM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில், முன்கூட்டிய அறிவித்தலின்றி சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தைத் துண்டித்தமை தொடர்பில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர, மின்சார சபையிடம் அறிக்கை கோரியுள்ளார். நேற்று முன்தினம் முதல் பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. கெரவலப்பிட்டிய மின்நிலைய மின் பிறப்பாக்கி​யின் செயற்பாடுகளுக்கு போதுமானளவு எரிபொருள் இல்லாதமையால் மின்சார விநியோகத்தை துண்டித்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது. மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும். எனினும் நேற்று முன்தினம் மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கு இவ்வாறான அனுமதி எதுவும் பெறப்படவில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்சார விநியோகத்தைத் துண்டிக்கக்கூடாது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, கடன் எல்லை அதிகரித்துள்ளதால் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் இலங்கை மின்சார சபைக்கு மீண்டும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய கடன் தொகையை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையானது, பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய கடன் தொகை 86 பில்லியன் ரூபாவாகும். இந்தக் கடன் தொகையை செலுத்துவதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். இதனை முன்னிட்டு அரச வங்கியிடமிருந்து 5 பில்லியன் கடனை பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது நிலவும் வறட்சியுடனான வானிலையால் நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்