பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

பாராளுமன்ற அமர்வில் பிரதமரிடம் கேள்விகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம்

by Staff Writer 05-02-2020 | 7:38 AM
Colombo (News 1st) பாராளுமன்றம் இன்று (05) பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இன்றைய அமர்வின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சிறப்புரை ஆற்றுவற்கான சந்தர்ப்பம் உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினம் பிரதமரிடம் கேள்விகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிட்டவுள்ளது. மாதாந்தம் முதலாவது புதன்கிழமைகளில், பிரதமரிடம் கேள்விகளை எழுப்பும் நடைமுறை கடந்த நல்லாட்சி காலம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இன்று எதிர்க்கட்சி தரப்பில் 3 கேள்விகளும் ஆளும்தரப்பு சார்பில் கேள்வியொன்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் முன்வைக்கப்படவுள்ளது. அத்துடன், பாராளுமன்றத் தெரிவிக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளன. பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து கலைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுக்களுக்காக புதிய உறுப்பினர்களின் பெயர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டனவா என்பது தொடர்பில் அண்மைக்காலமாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒரு இறுவெட்டு மாத்திரம் பாராளுமன்றத்தின் ஹென்சாட் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டும் என சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.