by Bella Dalima 05-02-2020 | 7:26 PM
Colombo (News 1st) தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் நிச்சயம் வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
1000 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கான நடைமுறை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, மார்ச் முதலாம் திகதி முதல் 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தோட்ட உரிமையாளர்கள் கூறியுள்ளதாகவும் அனைத்து தோட்டத்தொழிலாளர்களுக்கும் 1000 ரூபா சம்பளம் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் குறிப்பிட்டார்.
மேலும், 1000 ரூபா சம்பளம் வழங்க தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தோட்ட நிறுவனங்களுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டார்.