இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

இங்கிலாந்தை 7 விக்கெட்களால் வீழ்த்தியது தென்னாபிரிக்க அணி

by Staff Writer 05-02-2020 | 8:34 AM
Colombo (News 1st) முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் உலக சம்பியனான இங்கிலாந்தை 7 விக்கெட்களால் தென்னாபிரிக்கா வீழ்த்தியுள்ளது. இதேவேளை, சர்வதேச ஒருநாள் அரங்கில் 5000 ஓட்டங்களை விரைவாக கடந்த ஆறாவது வீரராக குயின்டன் டி கொக் பதிவாகியுள்ளார். கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சார்பாக ஜேசன் ரோய் 32 ஓட்டங்களை பெற்றார். இங்கிலாந்து 108 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்களையும் இழந்தது. ஜோ ரூட் 17 ஓட்டங்களை பெற்றார். அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் ஜோ டென்லி 87 பெற்று இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தார். தனது 100 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய கிறிஸ் வோக்ஸ் 40 ஓட்டங்களை பெற்றார். இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்களை பெற்றது. டப்ரியாஷ் ஷம்ஷி 3 விக்கெட்களை வீழ்த்தினார். வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்கா 25 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. எனினும் அணித்தலைவர் குயின்டன் டி கொக் மற்றும் டெம்பா பவுமா ஜோடி இரண்டாவது விக்கெட்காக 173 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றிக்கு வழிவகுத்தது. குயின்டன் டி கொக் ஒருநாள் அரங்கில் 15 ஆவது சதத்தை எட்டிய நிலையில் 107 ஓட்டங்களை பெற்றார். இதன்போது தனது 116 ஆவது இன்னிங்ஸில் 5000 ஓட்டங்களை கடந்த குயின்டன் டி கொக் ஒருநாள் அரங்கில் இந்த இலக்கை விரைவாக கடந்த ஆறாவது வீரராக பதிவானார். தென்னாபிரிக்காவின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹாசீம் அம்லா 101 இன்னிங்ஸ்களில் 5000 ஓட்டங்களை விரைவாக கடந்து இந்த பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். டெம்பா பவுமா 98 ஓட்டங்களை பெற்று சதத்தை தவறவிட்டார். வென் டு டசன் 38 ஓட்டங்களை பெற்றார். தென்னாபிரிக்கா 47.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 1 - 0 என தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.