முதலமைச்சரால் பதவி நீக்கப்பட்ட பா.டெனீஸ்வரனுக்கு நான்கு மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது

முதலமைச்சரால் பதவி நீக்கப்பட்ட பா.டெனீஸ்வரனுக்கு நான்கு மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது

முதலமைச்சரால் பதவி நீக்கப்பட்ட பா.டெனீஸ்வரனுக்கு நான்கு மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2020 | 6:14 pm

Colombo (News 1st) முதலமைச்சரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட வட மாகாண முன்னாள் அமைச்சர பா.டெனீஸ்வரனுக்கு நான்கு மாத சம்பளம் வட மாகாண சபையால் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தம்மை அமைச்சரவையிலிருந்து 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி பதவி விலக்கியதை ஆட்சேபித்து பா. டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்ததையடுத்து, அந்த பதவி நீக்கம் தவறானது என 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்தது.

நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக தனது சம்பளத்தை வழங்குமாறு வடமாகாண முன்னாள் அமைச்சர் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

சட்டமா அதிபர் வட மாகாண பிரதம செயலாளருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம், வடமாகாண முன்னாள்
அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்குரிய நான்கு மாத சம்பளம் வழங்கப்பட்டதாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.தெய்வேந்திரம் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்த காலப்பகுதியிலிருந்து மாகாண சபை கலைக்கப்படும் வரையிலான நான்கு மாதங்களுக்குரிய சம்பளம் பா.டெனீஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தான் அமைச்சரவையிலிருந்து விலகியபோது கைத்தொலைபேசி மற்றும் மடிக்கணினி என்பவற்றை ஒப்படைக்காமை காரணமாக தனது ஒப்புதலின் பிரகாரம் 197,950 ரூபா கழிக்கப்பட்டு 5,23,847 ரூபா 27 சதம் வட மாகாண சபையால் வங்கியில் வைப்பிலிடப்பட்டதை பா.டெனீஸ்வரன் உறுதிப்படுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்