பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தி

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

by Staff Writer 04-02-2020 | 8:23 PM
Colombo (News 1st) சுதந்திரம் கிடைத்த பின்னரான கடந்த 72 வருடங்களை மீட்டிப்பார்க்க வேண்டியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வப்போது ஏற்பட்ட கடுமையான சவால்களின் மத்தியிலும் சர்வஜன வாக்குரிமை அடிப்படையிலான பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமை நாட்டில் பாதுகாக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசியல் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதார முன்னேற்றத்தை நாட்டிற்கு மீண்டும் பெற்றுக்கொடுப்பதே தமக்கு முன்னால் உள்ள சவாலாகும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அபிமானமிகு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு சுதந்திர தினமான இன்று உறுதிபூண வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன, மத, குல, சாதி போன்ற பேதங்கள் இன்றி ஒன்றாக இணைந்து இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்துள்ள அனைவருக்கும் தேசத்தில் கௌரவம் கிடைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இலங்கை மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு உயிர்த்தியாகம் செய்த அனைத்து தேசப்பற்றாளர்களுக்கும் தேசத்தின் கௌரவம் என்றென்றும் கிட்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். சிறுபான்மை மக்களையும் அணைத்துச் செல்லும் வகையில், அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் என மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி விடுத்துள்ள சுதந்திர தின செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.