by Staff Writer 04-02-2020 | 7:30 PM
Colombo (News 1st) மலேசியாவின் எயார் ஏசியா விமான சேவையின் தலைவர் Kamarudin Meranun மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி Tony Fernandes ஆகியோர் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.
எயார்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து 50 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டையடுத்து அவர்கள் பதவி விலகியுள்ளனர்.
எனினும், விமான சேவையின் இணை ஸ்தாபகர்களான அவர்கள் எயார் ஏசியாவின் ஆலோசகர்களாக தொடர்ந்தும் செயற்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலஞ்ச ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அவர்கள் மறுத்துள்ளனர்.
ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான எயார்பஸ் நிறுவனம் 180 விமானங்களை கொள்வனவு செய்ய எயார் ஏசியாவுக்கு இலஞ்சம் வழங்கியதாக பிரித்தானியாவின் பாரிய மோசடி தொடர்பில் ஆராயும் அலுவலகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையொன்றின் மூலம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுப்பதாக எயார் ஏசியா நேற்று (03) தெரிவித்தது.
தொழிலதிபரான Tony Fernandes மலேசிய அரசாங்கத்திடமிருந்து எயார் ஏசியா விமான சேவையை ஒரு டொலருக்கும் குறைந்த பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கினார்.
போர்ப்ஸ் பத்திரிகையின் தரப்படுத்தலுக்கு அமைய, 530 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு உரிமையாளரான அவர் மலேசியாவின் மிகப்பெரும் செல்வந்தர் ஆவார்.
பிரித்தானியாவின் பாரிய மோசடி தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் சுதந்திரமான விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக மலேசிய ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு அறிவித்துள்ளது.