MRI இல் வைத்தியர் பற்றாக்குறை

தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்தியர் பற்றாக்குறை

by Staff Writer 02-02-2020 | 10:13 AM
Colombo (News 1st) தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. நிறுவனத்தில் 2 வைத்தியர்களே கடமையாற்றுகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் இரத்த மாதிரிகளைப் பரிசோதிப்பதற்காக நாளாந்தம் ஒரு தொகை மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்குக் கிடைப்பதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இவற்றைப் பரிசோதிப்பதற்காக மேலும் இரண்டு வைத்தியர்களைப் பெற்றுத்தருமாறு தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளது. இதன்பிரகாரம், சுகாதார அமைச்சு, இரண்டு வைத்தியர்களை தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளபோதிலும் இதுவரை அவர்கள் சேவைக்கு சமூகமளிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற அச்சத்தில் அவர்கள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சமூகமளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் இதுவரை காலம் பணியாற்றிய 2 வைத்தியர்களும் தொடர்ச்சியாக கடமைகளில் ஈடுபடவேண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பில் இடம்பெறும் இரத்த மாதிரிப் பரிசோதனைக்கான சுமார் 8 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றன. இதுவரை 20 இரத்த மாதிரிகள் கிடைத்துள்ளதாக தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.