கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 259ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 259 ஆக அதிகரிப்பு

by Staff Writer 01-02-2020 | 7:52 PM
Colombo (News 1st) சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளது. அதிகளவிலான மரணங்கள் வுஹான் நகரின் ஹூபெய் பிராந்தியத்தில் பதிவாகியுள்ளது. மேலும், 2102 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், இதுவரை சீனாவில் 11,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா தனது நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில், இரண்டு வாரங்களுக்குள் சீனாவிற்கு விஜயம் செய்த எந்த ஒருவரையும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. பிரித்தானியா, சுவீடன், ரஷ்யாவிற்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதுடன், இதுவரை 22 நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை, 15 நிமிடங்களுக்குள் கொரோனா வைரஸை அடையாளங்காணும் உபகரணம் சீன ஆராய்ச்சியாளர்களினால் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற 4000 கருவிகளை தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. அனைத்து கருவிகளும் வுஹான் நகரின் சுகாதார பிரிவிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.