கொரோனா: நிபுணர்களின் உதவியைப் பெறுமாறு பணிப்புரை

கொரோனா தொற்றுள்ளோரை குணப்படுத்த விசேடத்துவம் பெற்றவர்களின் உதவியைப் பெறுமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 01-02-2020 | 4:31 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளானோரை குணப்படுத்துவதற்காக மேலைத்தேச மற்றும் சுதேச மருத்துவ முறைகளில் விசேடத்துவம் பெற்றவர்களை வரவழைத்து தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவினர் ஜனாதிபதியை நேற்று (31) சந்தித்த போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் சுகாதாரம், வெளிவிவகார, சுற்றுலா மற்றும் உயர் கல்வி அமைச்சர்களும் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மக்களை பாதுகாப்பதற்காக வைரஸ் தொற்று நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்லுமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார். சீனாவின் வுஹான் நகரிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உரிய வகையில் ஏற்படுத்திக்கொடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, சுற்றுலாத்துறையை பாதுகாத்து தற்போதைய நிலைமையை எதிர்கொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் வதிவிட விசா விநியோகிக்கப்பட்ட பணியிடங்களில் இருக்கும் சீன பிரஜைகளுக்கான ஆலோசனைக் கடிதங்கள் இன்று வழங்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் தங்கியுள்ள சீன பிரஜைகள் மற்றும் அண்மையில் சீனாவிற்கு சென்று திரும்பிய ஊழியர்களை அவர்கள் தொழில் செய்யும் இடங்கள் மற்றும் தங்கியுள்ள விடுதிகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.