சீனாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்கள் தியத்தலாவை இராணுவ முகாமிற்கு அனுப்பி வைப்பு 

சீனாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்கள் தியத்தலாவை இராணுவ முகாமிற்கு அனுப்பி வைப்பு 

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2020 | 3:53 pm

Colombo (News 1st) சீனாவின் வுஹான் நகரிலிருந்து வருகை தந்த மாணவர்கள் தியத்தலாவை இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

14 நாட்கள் கண்காணிப்பின் பின்னர் அவர்களை அங்கிருந்து வௌியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

வுஹான் நகரிலிருந்து 33 இலங்கை மாணவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் ஏற்றிய UL1423 விமானம் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தது.

மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் பொறுப்பேற்றனர்.

இலங்கை இராணுவத்தின் விசேட மருத்துவப் பிரிவின் கண்காணிப்பில் இவர்கள் அனைவரும் எதிர்வரும் 14 நாட்களுக்கு வைக்கப்படவுள்ளனர்.

இலங்கை வந்தடைந்துள்ள மாணவர்களின் நலன் கருதி , அனைத்து வசதிகளுடன் கூடிய இரண்டு புதிய கட்டடங்கள் தியத்தலாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் மாணவர்களின் உடல்நிலை தொடர்பில் ஆராயவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த ஐந்து நாட்களில் 660 இலங்கை பிரஜைகள் சீனாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

மேலும், 200-க்கும் அதிகமான இலங்கை மாணவர்கள் சீனாவில் வசிப்பதாக சீனாவிற்கான இலங்கையின் பதில் தூதுவர் கே.யோகநாதன் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பிற்காக 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிதி IDH வைத்தியசாலை உள்ளிட்ட 12 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அங்கொடை தேசிய நோய் தொற்றியல் நிறுவகம், வடகொழும்பு போதனா வைத்தியசாலை, கம்பஹா பொது வைத்தியசாலை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, அநுராதபுரம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, குருநாகல் போதனா வைத்தியசாலை, இரத்தினபுரி பொது வைத்தியசாலை பதுளை, மட்டக்களப்பு பொது வைத்தியசாலை ஆகியவற்றிற்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுத்தல் மற்றும் அதற்கான சிகிச்சைகளின் போது மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு உரிய முறையில் இந்த நிதி பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இ​தேவேளை, இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வந்த ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் விமானி உள்ளிட்ட பணிக்குழுவின் 16 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சுனாமி உள்ளிட்ட தேசிய இடர்களின் போது, எந்தவொரு சவால் மிகு சந்தர்ப்பத்திலும் விமான நிறுவனம் தமது சேவையை ஆற்றும் என ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் அஷோக் பத்திரண அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார்.

வுஹானுக்குச் செல்வதற்கு தாமாகவே முன்வந்த தமது விமானப் பணிக்குழு குறித்து நிறுவனத்தின் அனைவரும் பெருமிதமடைவதாகவும் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்தளை விமான நிலையத்தில் சுமார் மூன்று மணித்தியாலங்களாக தீவிர கண்காணிப்பின் கீழ் விமானம் பரிசோதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது.

பணிக்குழு மற்றும் விமானம் கிருமி ஒழிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பகல் 12.48 அளவில் மத்தளையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த விமானம் 1.15-இற்கு கட்டுநாயக்கவை சென்றடைந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்