இந்திய மீனவர்கள் நால்வர் நிபந்தனைகளுடன் விடுவிப்பு

யாழில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வர் நிபந்தனைகளுடன் விடுவிப்பு

by Staff Writer 31-01-2020 | 3:56 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் நால்வரும் இன்று ஊர்காவற்றுறை நீதவான் ஏ. யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையுடன் கூடிய 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து மீனவர்களை விடுவித்துள்ளார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த 19 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். மீனவர்கள் நால்வரும் எதிர்வரும் ஓரிரு நாட்களில் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இதேவேளை, திருகோணமலை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக திருகோணமலை மாவட்ட கடற்படையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை மாவட்ட மீன்பிடி திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.