ஜனாதிபதி செயலக முன்றலில் ஆர்ப்பாட்டங்கள்

ஜனாதிபதி செயலக முன்றலில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 31-01-2020 | 8:02 PM
Colombo (News 1st) சில கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி செயலக முன்றலில் இன்று பிற்பகல் வரை ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதி செயலாளர், பிரதமர் அலுவலக பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் ஆர்ப்பாட்டங்கள் நிறைவு பெற்றன. கடந்த அரசாங்க காலப்பகுதியில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் தொழில்வாய்ப்பை இழந்ததாகத் தெரிவித்து நேற்று மாலை முதல் இன்று காலை வரை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் சிலர் தங்கியிருந்தனர். காலி வீதியின் ஒரு பகுதியை மறித்து தமது கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். பின்னர் ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவுடன் கலந்துரையாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, வீதியில் இருந்து கலைந்து சென்றனர். தொல்பொருள் திணைக்களத்தில் சேவையாற்றிய நிலையில், தொழிலை இழந்தததாகக் கூறுபவர்கள், ஜனாதிபதி செயலாளருடன் கலந்துரையாடிய பின்னர் தமது ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர். பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் தொழில்வாய்ப்பை இழந்ததாகக் கூறும் சிலர், அலரி மாளிகையில் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடினர். அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடலொன்றை நடத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட பின்னர், தமது ஆர்ப்பாட்டத்தை அவர்கள் கைவிட்டனர். இதேவேளை, பிரதேச அபிவிருத்தி அமைச்சில் சேவையாற்றியதாகக் கூறும் சிலர், ஜனாதிபதி செயலக முன்றலில் இன்று பிற்பகல் கூடியிருந்தனர்.