சீனாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம்: அமெரிக்கா

சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம்; சீனாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாமென அமெரிக்கா அறிவுறுத்தல்

by Bella Dalima 31-01-2020 | 4:12 PM
Colombo (News 1st)  ​கொரோனா வைரஸ் பரவுவதால் சீனாவிற்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவுறுத்தல் தொடர்பில் சீனா இதுவரை எவ்வித கருத்துக்களையும் வௌியிடவில்லை. இதனிடையே, அமெரிக்காவை போன்று ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளும் தத்தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. இதேவேளை, சீனாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரை 213 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் புதிதாக 1220 நோயாளிகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், இதுவரை 9692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸினால் சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உலக அளவில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை இது ஆறாவது முறையாகும். 2016 ஆம் ஆண்டில் ஸிக்கா வைரஸ் தாக்குதல், 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் எபோலா தொற்று உள்ளிட்ட 5 முறைகள் மாத்திரமே உலக அளவில் சுகாதார அவசர நிலை பிரகடன அறிவிப்பை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டிருந்தது.