கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 213 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 213 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 31-01-2020 | 7:48 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 213 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக BBC செய்தி வௌியிட்டுள்ளது. 9962 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை வரை சீனா அடங்கலாக 22 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர். தமது நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொடர்பில் பிரித்தானியா விடுத்திருந்த அபாய மட்டத்தை, கீழ் மட்டத்தில் இருந்து நடுத்தர மட்டம் வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க அரசாங்கம் தமது பிரஜைகளை எச்சரித்துள்ளது. இத்தாலிக்கு சென்றுள்ள இரண்டு சீன சுற்றுலாப் பயணிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தமது நாட்டிற்கும் சீனாவுக்கும் இடையிலான அனைத்து விமானப் பயணங்களையும் இரத்து செய்யுமாறு இத்தாலி பிரதமர் Giuseppe Conte அறிவித்துள்ளார்.