ஶ்ரீபாத கல்லூரியின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

மாணவர்களிடையே காய்ச்சல் பரவல்: ஶ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

by Staff Writer 30-01-2020 | 3:35 PM
Colombo (News 1st) பத்தனை - ஶ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர் பயிற்சி மாணவர்களிடையே பரவியுள்ள காய்ச்சல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி விடுதிக்கு சென்ற பிராந்திய சுகாதார அதிகாரிகளால் ஶ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியின் முதல்வருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளின் பிரகாரம் கல்வி செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. விடுதிகளில் தங்கியிருந்தவர்களில் சுமார் 40 மாணவர்கள் கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர் ராகவன் குறிப்பிட்டார். மேலும் 30 மாணவர்கள் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக அவர் கூறினார். காய்ச்சல், தலைவலி மற்றும் தொண்டைவலி ஆகிய குணங்குறிகளுடன் மாணவர்களுக்குள் நோய் பரவியுள்ளதாகவும் கொட்டகலை பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர் ராகவன் தெரிவித்தார். இதன் காரணமாக கொட்டகலை ஶ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே பரவியுள்ள இந்த காய்ச்சல் தொடர்பில் ஆராய்வதாக கொட்டகலை பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் சுட்டிக்காட்டியுனார்.