ஐ.தே.க தலைவராக தொடர்ந்தும் ரணில்; முன்னணியின் தலைவர் பதவி சஜித்திற்கு - செயற்குழுவில் தீர்மானம்

by Bella Dalima 30-01-2020 | 5:23 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் வைத்திருக்கவும் கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசவை நியமிக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று தீர்மானித்துள்ளது. சுமார் 30 உறுப்பினர்கள் புறக்கணித்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று பிற்பகல் கூடியது. இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத காரணத்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் சிலர் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தின் நிறைவில் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கினார். ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாச செயற்படுவார் என அவர் கூறினார். மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாச செயற்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அடுத்த வியாழக்கிழமை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடி இந்த தீர்மானத்தை உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, கட்சியின் தலைமைத்துவத்தில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் நீடிப்பார் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 37 பேர் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ​செயற்குழுவில் 30 தொடக்கம் 40 வரையான உறுப்பினர்கள் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாகார், சரத் பொன்சேகா , அஜித் பீ. பெரேரா , ரோசி சேனாநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்று பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாகார் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று மாலை இடம்பெற்றது.