கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன - பிரதமர்

by Staff Writer 30-01-2020 | 8:23 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கொரோனா வைரஸ் தொடர்பில் தொலைபேசியில் இன்று கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடலின் பின்னர் ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டில் இந்தியாவில் இருந்து முகக்கவசங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். N95 ரக முகக்கவசங்களை இலவசமாக அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மொரட்டுவையில் இன்று நடைபெற்ற மத வழிபாடுகளில் பங்கேற்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ முகக்கவசங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
இங்கு கூடியுள்ள எவரும் முகக்கவசங்களை அணியாதிருப்பது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எனது அமைச்சுக்கு நேற்று நான் சென்றிருந்த போது இளைஞர்கள் நால்வர் முகக்கவசங்களை அணிந்த வண்ணம் வீதியில் நின்றுகொண்டிருந்தனர். வேறு எவரும் இல்லை, அந்த நால்வர் மாத்திரமே அணிந்திருந்தனர். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யுமாறு சிலர் கூறுகின்றனர். அரசாங்கமே இறக்குமதி செய்ய வேண்டும் என கூறுகின்றனர். நாம் குழப்பமடைய வேண்டியதில்லை என நான் எண்ணுகின்றேன். நாட்டிற்குள் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எவ்வித குழப்பமுமின்றி அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரையில் நோயாளர் ஒருவர் மாத்திரமே பதிவாகியுள்ளார். ஏனையவருக்கு பரவவில்லை. அதனால் குழப்பமடைய வேண்டிய தேவையில்லை. எனினும், சுத்தமாக இருப்பது அவசியமாகும்.
என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.