குறைநிரப்புப் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

குறைநிரப்புப் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

குறைநிரப்புப் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2020 | 1:55 pm

Colombo (News 1st) கடந்த அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட 130 பில்லியன் ரூபா கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான குறைநிரப்புப் பிரேரணையை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இந்த விடயத்தை தௌிவுபடுத்தியுள்ளார்.

தேசிய ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக கடனை செலுத்துவதற்கான நிலை காணப்படுவதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு கொடுப்பனவு செலுத்தத் தவறியுள்ள பல திட்டங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான செயற்றிட்டங்களின் ஒப்பந்தக்காரர்கள், விநியோகஸ்தர்கள், தொழில் முயற்சியாளர்கள் ஆகியோருக்கு கடன் செலுத்தவேண்டி உள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கடந்த நவம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கு சுமார் 130 பில்லியன் ரூபா கடன் செலுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த விடயங்களை ஆதாரபூர்வமான தரவுகளுடன் முன்வைத்து, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கடனை செலுத்துவதற்கு மேலதிகக் கடனைப் பெறவேண்டி உள்ளதாகவும் அதற்கான பாராளுமன்ற அனுமதியை அடுத்த வாரம் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளத்தை கொடுப்பதற்குத் தவறினால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதற்கு அமைய, தோட்ட நிர்வாகங்கள் அதனை வழங்க வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இதனைத் தோட்ட நிர்வாகங்கள் நிறைவேற்ற தவறினால் தோட்டங்களை பொறுப்பேற்று அவற்றை இளைஞர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்