ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

by Staff Writer 29-01-2020 | 6:03 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொடை நீதவான் U.H.K.பெல்பொல முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடி மற்றும் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கடந்த 15 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார மன்றுக்கு குறிப்பிட்டார். இதன் காரணமாக விசாரணைகள் நிறைவுபெறும் வரை ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பிணை வழங்குவதை தாம் ஆட்சேபிப்பதாகவும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார். பிணை வழங்கும் பட்சத்தில் பொதுமக்கள் மத்தியில் அவர் பல கருத்துக்களை வௌியிடக்கூடும் எனவும் மன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் சாட்சியாளர்களுக்கு ஏனைய தரப்பினரூடாக அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் என்பதால், விசாரணைகள் நிறைவு பெறும் வரை ரஞ்சன் ராமநாயக்கவை விளக்கமறியலில் வைக்குமாறு அரச சிரேஷ்ட சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார். தமது சேவை பெறுநருக்கு பிணை வழங்கும் பட்சத்தில் விசாரணைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாது என ரஞ்சன் ராமநாயக்கவின் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபயரத்ன அறிவித்துள்ளார். தற்போது வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் தமது சேவை பெறுநரான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பிணை வழங்குமாறும் அவரின் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார். இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான் பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன் சந்தேகநபரான ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசி கலந்துரையாடல்கள் அடங்கிய இறுவெட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் ஒலியை பதிவு செய்வதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதி அரச பகுப்பாய்வு நிலையத்தில் அவரை முன்னிலையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.