மக்கள் சக்தி: அடம்பனே சுதர்ஷன மகா வித்தியாலய மாணவர்களுக்கான குடிநீர்த் திட்டம் கையளிப்பு

by Staff Writer 29-01-2020 | 8:43 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்க முன்நிற்கும் மக்கள் சக்தியின் மற்றுமொரு திட்டம் மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டது. அனுராதபுரம் - தலாவ, அடம்பனே சுதர்ஷன மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த பாடசாலையில் சுமார் 240 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். எனினும், சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வது பாரிய பிரச்சினையாகக் காணப்பட்டது. ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பாடசாலைக்கு நீர் வடிகட்டமைப்பொன்று வழங்கப்பட்டிருந்த போதிலும், தேவையான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை இந்த பாடசாலை எதிர்நோக்கியிருந்தது. இந்த பிரச்சினை தொடர்பில் அறிந்த மக்கள் சக்தி, அடம்பனே சுதர்ஷன மகா வித்தியாலயத்திற்கு குடிநீர்த் திட்டமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 'மக்கள் சக்தி மக்கள் அரண்' ஒத்துழைப்பு வழங்கியது. பாடசாலையில் இருந்து 300 மீட்டர் தூரத்திலுள்ள பொது நீர்த்திட்டமொன்றில் இருந்து குழாய் மூலமாக நீரைப்பெற்று இந்த நீர்த்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான நீர்த்திட்டம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையில் மூன்று இடங்களில் குழாய்களை அமைத்து மாணவர்களுக்கான நீர் விநியோக வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.