சீனாவிலிருந்து மேலும் 4 விமானங்கள் இலங்கை வரவுள்ளன

by Staff Writer 29-01-2020 | 8:10 PM
Colombo (News 1st) சீனாவிலிருந்து இலங்கையர்களை ஏற்றிய மேலும் நான்கு விமானங்கள் இன்றிரவு இலங்கையை வந்தடையவுள்ளன. சீனாவில் உயர் கல்வியைத் தொடரும் 380 மாணவர்கள் இதுவரை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீனாவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் 484 பேர் நாடு திரும்பும் எதிர்பார்ப்பிலுள்ளதாக பதில் தூதுவர் கே.யோகநாதன் தெரிவித்தார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக, சீன அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவிற்கான இலங்கையின் பதில் தூதுவர் கே.யோகநாதன் கூறினார். வுஹான் நகரிலுள்ள தமது பிரஜைகளை ஏற்றிய ஜப்பான் மற்றும் அமெரிக்க விமானங்கள் தத்தமது நாடுகள் நோக்கிப் புறப்பட்டுள்ளன. பிரான்ஸின் வேண்டுகோளுக்கு அமைய சீனாவிலுள்ள ஐரோப்பியர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சீனாவிலுள்ள பாகிஸ்தான் மாணவர்கள் நால்வருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக பாகிஸ்தான் இன்று அறிவித்தது. இந்த நிலையில், இலங்கையில் பாரிய வேலைத்திட்டங்களில் பணிபுரியும் சீனப் பிரஜைகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் சீனப் பிரஜைகள் இன்று பரிசோதிக்கப்பட்டனர். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட சீன பிரஜையான பெண்ணின் உடல் நிலை சீராகவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், வைரஸ் பரிவியுள்ளதா என பரிசோதிப்பதற்காக இரண்டு மாதிரிகள் தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக, பொரளை மருத்துவ பரிசோதனை நிறுவனத்தின் பணிப்பாளர் ஜயருவன் பண்டார தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றியுள்ளவர்களை விமான நிலையத்தில் அடையாளம் காணும் நடவடிக்கை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டது. இந்த வைரஸ் காற்று மூலம் பரவுவதைத் தடுக்கக்கூடிய நெனோ தொழில்நுட்பக் கருவி விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது ஏழு வருடங்களுக்கு முன்னர் மஞ்சு குணவர்தனவினால் உருவாக்கப்பட்டது என்பதுடன், அதன் காப்புரிமை அவருக்கு உரித்தானதாகும். கிருமிகள் காற்றின் மூலம் பரவுவதை இந்தக் கருவியினால் தடுக்க முடியும் என்பதுடன், விமான நிலையத்தில் மிகவும் முக்கியமான 22 இடங்களில் இந்தக் கருவியைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.