சீனாவிற்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான சேவை இரத்து

சீனாவிற்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான சேவை இரத்து

by Bella Dalima 29-01-2020 | 4:47 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவிலிருந்து வரும், சீனா செல்லும் அனைத்து பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானங்களையும் இரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட மொத்தம் 15 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனா பரவுவதைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு விதமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அனைத்து நாடுகளும் தங்களது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் மருத்துவ சோதனை மையங்களை நிறுவியுள்ளன. இந்நிலையில், சீனாவிற்கான அனைத்து விமானங்களையும் இரத்து செய்துள்ளதாக பிரிட்டனின் மிக முக்கிய விமானச் சேவை நிறுவனமான பிரிட்டிஷ் எயார்வேஸ் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக ரஷ்யாவின் யூரல்ஸ் எயார்லைன்ஸ், சீன சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான பாரிஸ் மற்றும் ரோம் உள்ளிட்ட சில ஐரோப்பிய நகரங்களுக்கான விமான சேவையை நிறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.