கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும்

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும்: சீன ஜனாதிபதி நம்பிக்கை

by Staff Writer 29-01-2020 | 7:49 PM
Colombo (News 1st) சீன கம்யூனிஸக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் மக்களின் பலத்தால் புதிய கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) நம்பிக்கை வௌியிட்டுள்ளார். கொரோனா வைரஸிற்கு எதிராக சீனா முன்னெடுத்துள்ள திட்டத்துடன் உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கனவே இணைந்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று சீனாவை சென்றடைந்ததுடன், அவர்கள் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கையும் சந்தித்துள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமை தொடர்பாக அமைதியாகவும் உறுதியாகவும் மதிப்பீடு செய்யும் என தாம் நம்புவதாக சீன ஜனாதிபதி இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸின் மரண வீதம் குறைவடையும் என சுவாசக்கோளாறு தொடர்பிலான சீன நிபுணர் சொன் நென்ஷென் தெரிவித்துள்ளார். வைரஸை இலக்காகக் கொண்டு இதுவரை எவ்வித மருந்து வகையும் உற்பத்தி செய்யப்படாத போதிலும், விஞ்ஞானிகளும் மருத்துவக் குழுக்களும் ஏற்கனவே பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் ஆய்வுகளை செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயிர் பாதுகாப்பு கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக மரண வீதம் குறைவடையும் என்பதே அவரது கருத்தாகும். கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று மாலை 132 ஆக அதிகரித்திருந்ததுடன், வைரஸ் தொற்றுக்கு இலக்கான சுமார் 6000 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வைரஸ் 17 நாடுகளில் பதிவாகியுள்ளது. சீனா, இலங்கை, கம்போடியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா, நேபாளம், பிரான்ஸ், வியட்னாம், சிங்கப்பூர், ஹொங்கொங், மெகாவ், தாய்வான், கொரியா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு இராச்சியத்திலும் இன்று கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்ட ஒருவர் முதற்தடவையாக இனங்காணப்பட்டுள்ளார்.