நாட்டில் பணிபுரியும் சீனப் பிரஜைகளை பரிசோதிக்க நடவடிக்கை

நாட்டில் பணிபுரியும் சீனப் பிரஜைகளை பரிசோதிக்க நடவடிக்கை

நாட்டில் பணிபுரியும் சீனப் பிரஜைகளை பரிசோதிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2020 | 7:06 am

Colombo (News 1st) நாட்டின் பாரிய திட்டங்களில் பணிபுரியும் சீன பிரஜைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதற்காக சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் பகுதிகளுக்கு சென்று, கொரோனா வைரஸ் தொடர்பில் சீன பிரஜைகளுக்கு விளக்கமளிக்கவுள்ளதுடன் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடி சிகிச்சை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகர் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் பெரும்பாலான சீன பிரஜைகள் பணிபுரிவதுடன், அவர்கள் தொடர்பில் சுகாதார பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனப் பெண் தவிர, மேலும் 7 பேர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக குறித்த பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக இரண்டு மாதிரிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொரளை மருத்துவ ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் ஜயருவன் பண்டார கூறியுள்ளார்.

இரண்டு மாதிரிகள் தொடர்பிலான இறுதி அறிக்கை இன்று வௌியிடப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சீனாவின் 3 பகுதிகளை சேர்ந்தவர்கள் நாட்டிற்கு வருவதற்காக விசாவை குடிவரவு குடியகல்வு திணைக்களம் இரத்து செய்துள்ளது.

வுஹான், ஹூவெங்ஹனெ்க், ஏஷூ ஆகிய நகரங்களுக்கான விசா இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, சீனாவின் மேலும் 53 நகரங்களில் வசிக்கும் மக்கள், இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் விசாவுக்கு விண்ணப்பித்தல் அவசியம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விமான நிலையத்தில் அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்