மூன்று சீன நகரங்களுக்கு விசா இரத்து

மூன்று சீன நகரங்களிலிருந்து நாட்டிற்கு வருகை தருவதற்கான விசா இரத்து

by Staff Writer 28-01-2020 | 7:36 PM
Colombo (News 1st) சீனாவின் மூன்று நகரங்களை சேர்ந்த மக்கள் நாட்டிற்கு வருவதற்கான விசாவை குடிவரவு குடியகல்வு திணைக்களம் இரத்து செய்துள்ளது. வுஹான், ஹூவெங்ஹென்ஞ் மற்றும் ஏசு ஆகிய மூன்று நகரங்களுக்கான விசா இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்துடன், சீனாவிலுள்ள மேலும் 54 நகரங்களிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் முன்கூட்டியே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வழிமுறையாக பயணிகள் தவிர்ந்த, அவர்களுடன் வருவோர் விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க இன்று காலை 6 மணி முதல் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சீனாவில் இருந்து வருகை தருகின்ற பயணிகள் விமான நிலையத்தின் விசேட முனையத்தின் ஊடாகவே உள்வாங்கப்படுகின்றனர். நேற்றிரவும் இன்று முற்பகலும் சீனாவிலிருந்து 150-க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். சீனாவின் ரியான்ஜிங்கில் இருந்து நேற்று பகல் புறப்பட்ட 21 மாணவர்கள் நேற்றிரவு 7.30 அளவில் நாட்டை வந்தடைந்ததுடன், மற்றுமொரு குழுவினர் இன்று அதிகாலை 5 மணிக்கு வருகை தந்தனர். இவர்களை ஏற்றிய ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று விமானங்கள் சீனாவின் பெய்ஜிங், குவன்ஷு மற்றும் ஷென்ஹாய் ஆகிய பகுதிகளிலிருந்து நாட்டை வந்தடைந்தன.