முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு; அச்சம் தேவையில்லை

முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு; அநாவசிய அச்சம் தேவையில்லை என அறிவிப்பு

by Staff Writer 28-01-2020 | 7:59 PM
 Colombo (News 1st) கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான நோயாளர் ஒருவர் இலங்கைக்குள் இனங்காணப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் முகக்கவசங்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள மருந்தகங்கள், வர்த்தக நிலையங்களில் 500 தொடக்கம் 1000 ரூபா வரை முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். சில இடங்களில் முகக்கவசங்கள் விற்றுத் தீர்ந்துள்ளதுடன், அரச மருந்தகங்களில் முகக்கவசங்களின் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முகக்கவசங்களை துரிதமாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு குறிப்பிட்டது. அத்துடன், முகக்கவசங்களின் உற்பத்தியையும் துரிதப்படுத்துமாறு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது. முகக்கவச விற்பனை சந்தையில் தற்போது மாஃபியாவாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே குறிப்பிட்டார். எவ்வாறாயினும், முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனவே, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.