பகிரங்க கலையம்ச ஜிம்னாஸ்டிக் சம்பியன் அனா மேரி ஒன்டஜி தாயகம் திரும்பினார்

by Staff Writer 28-01-2020 | 12:47 PM
Colombo (News 1st) சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பகிரங்க கலையம்ச ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கையின் அனா மேரி ஒன்டஜி (Anna-Marie Ondaatje) இன்று (28) அதிகாலை தாயகம் திரும்பியுள்ளார். பகிரங்க கலையம்ச ஜிம்னாஸ்டிக் போட்டிகள் சுவிட்சர்லாந்தில் ஓல்கட்ஸில் நடைபெற்றன. சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட முதலாவது பகிரங்க கலையம்ச ஜிம்னாஸ்டிக் போட்டி தொடர் இதுவாகும். ஐரோப்பிய கண்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 200 இற்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனர். கனடாவை பிறப்பிடமாகக் கொண்ட 19 வயது இலங்கையரான அனா மேரி ஒன்டஜி போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றார். போட்டித்தொடரில் அனா மேரி ஒன்டஜி இலங்கையையும் கனடாவையும் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பகிரங்க கலையம்ச ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் நான் பங்கேற்றேன். தொடரில் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை இலங்கைக்கு வென்றுகொடுக்க என்னால் முடிந்தது. வெற்றி தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன். 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை வென்றேன். இலங்கையில் கலையம்ச ஜிம்னாஸ்டிக் போட்டிகளை பிரபல்யப்படுத்தி, இந்நாட்டு மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதே எனது எதிர்கால இலக்கு என ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அனா மேரி ஒன்டஜி தெரிவித்துள்ளார்.