சீனாவிலிருந்து 60 மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்

சீனாவிலிருந்து 60 இலங்கை மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்

by Staff Writer 28-01-2020 | 7:47 AM
Colombo (News 1st) சீனாவின் செண்டு (Chengdu) நகரில் தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் சுமார் 60 பேர் இன்று (28) மாலை நாடு திரும்பவுள்ளனர். இன்று மாலை 5.30 மணிக்கு செண்டுவிலிருந்து இலங்கைக்கு வருகைதரவுள்ள எயார் சைனா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் குறித்த மாணவர்கள் நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். செண்டு நகரில் தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் 150 பேரில் 60 பேர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதுடன், ஏனையோர் நாளை மறுதினம் மாலை நாட்டை வந்தடையவுள்ளனர். குறித்த மாணவர்களுக்கு நியாயமான கட்டணத்தில் விமான பயணச்சீட்டுக்களை வழங்குமாறு விமான நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார். சீனாவின் செண்டு நகரில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று இன்று காலை 9 மணியளவில் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவிருந்தது. எனினும், அவ்வாறான விசேட விமான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசினால் நேற்று மாலை அறிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே கூறினார். இதன் பிரகாரம் குறித்த விமானம் இன்று பயணிக்க மாட்டாது எனக் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, சீனாவின் பீஜிங், ஷங்காய், மற்றும் கென்டோன் நகரங்களில் வசிக்கும் நூற்றுக்கும் அதிக மாணவர்கள் இன்று மாலை வேளைக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இதேவேளை, சீனாவின் டியென்ஜிங்கிலுள்ள 21 இலங்கை மாணவர்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.