சட்ட உரிமை விசாரணைக்குழுவிற்கு இல்லை

உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான சட்ட உரிமை விசாரணைக்குழுவிற்கு இல்லை: சட்ட மா அதிபர்

by Staff Writer 28-01-2020 | 6:37 PM
Colombo (News 1st) நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணைகள் தொடர்பில் தமக்கு உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான எவ்வித சட்ட உரிமைகளும் விசாரணைக்குழுவிற்கு இல்லை என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு முறையற்ற விதத்தில் தடுத்து வைத்து கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, ரியர் அட்மிரல் டீ.கே.பி தசநாயக்க உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு வௌியிடப்பட்ட அறிவிப்பிற்கே சட்ட மாஅதிபர் பதில் வழங்கியுள்ளார். அரசியல் அமைப்பின் 4 C மற்றும் 105 ஆம் பிரிவுகளுக்கு அமைய நீதிமன்ற உத்தரவின்றி தனது கடமையான முறைப்பாட்டை வழிநடத்தும் செயற்பாட்டை இடைநிறுத்த விசாரணை குழுவிற்கு எவ்வித சட்ட அதிகாரமும் இல்லை என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் 16 ஆவது சரத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட விசாரணை குழுக்களுக்கு சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பினூடாகவோ, சட்டரீதியாகவோ வழங்கப்படவில்லை எனவும் சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணைகளூடாக முன்வைக்கப்படும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே தமது திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்படுவதாகவும் ஏனைய புறக்காரணிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும்  அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை வழிநடத்துவதற்கு தமது கோரிக்கைக்கு அமையவே பிரதம நீதியரசரால் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டதாகவும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா கூறியுள்ளார். தனக்கு வழக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் சட்ட வழிமுறைகளை பின்பற்றியே விசேட மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாகவும் சட்ட மாஅதிபர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.