by Staff Writer 27-01-2020 | 3:10 PM
Colombo (News 1st) சீனாவிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வௌியேறும் பிரிவினூடாக வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் விசேட மருத்துவப் பிரிவினூடாக பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களையும் முகக்கவசத்தை அணிந்துகொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறுகின்றது.
சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சியின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கொடை தொற்றுநோய்ப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும் வைரஸ் தொற்று எற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைத் தடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட பரிசோதனைகள் ஊடாக எவரேனும் ஒருவர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளாரா என்பது தொடர்பில் உறுதியாகக் கண்டறிய முடியும் என சுகாதாரசேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.
உயர்கல்வியைத் தொடர்வதற்காக வுஹான் மாகாணத்திற்கு சென்ற மாணவர்களை இன்று அல்லது நாளைய தினத்திற்குள் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சீனாவிற்கான இலங்கையின் பதில் தூதுவர் கே.யோகநாதன் நியூஸ்பெஸ்ட்டிற்கு குறிப்பிட்டுள்ளார்.
தேவையேற்படும் பட்சத்தில் சீனாவிற்கு சுற்றுலா சென்ற அல்லது தொழில் நிமித்தம் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகளையும் நாட்டிற்கு அனுப்புவற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சீனாவிலுள்ள அனைத்து இலங்கையர்கள் தொடர்பிலான தரவுகளை சேகரிப்பதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக இலங்கையின் விமானமொன்றை வுஹான் நகர் விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தூதரகம், சீன வௌிவிவகார அமைச்சு மற்றும் வுஹான் மாகாண வௌிவிவகார அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டு விமானத்தை தரையிறக்குவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போது சீனாவிலுள்ள அனைத்து இலங்கை மாணவர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, தூதரகம் மற்றும் கொன்சியூலர் அலுவலகம், ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்து நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.