வசந்த கரன்னாகொட, தசநாயக்க மீதான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு அறிவிப்பு

வசந்த கரன்னாகொட, தசநாயக்க மீதான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2020 | 6:52 pm

Colombo (News 1st) தமது விசாரணைகள் நிறைவுபெறும் வரை கடற்படையின் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் D.K.P. தசநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.

2015 ஜனவரி 8ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களைத் திரட்டுவதற்காக ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

11 இளைஞர்களைக் கடத்திச்சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் வசந்த கரன்னாகொட மற்றும் D.K.P. தசநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலும் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அந்த வழக்கில் அரசியல் அழுத்தத்திற்கு ஏற்ப நீதிமன்றத்தில் சட்டரீதியிலான நடவடிக்கையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆணைக்குழு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சி விசாரணைகளை நிறைவுசெய்து ஜனாதிபதிக்கு சிபாரிசுகளை முன்வைக்கும் வரை வசந்த கரன்னாகொட மற்றும் D.K.P. தசாநாயக்க ஆகியோர் தொடர்பிலான வழக்கு விசாரணையை மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் முன்னெடுத்துச்செல்வது தொடர்பிலான எந்தவொரு நடவடிக்கையும் சட்டமா அதிபர் அல்லது அவரது அதிகாரத்தைப் பெற்ற அதிகாரி ஒருவரினால் முன்னெடுக்கப்படக்கூடாது என ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்