by Staff Writer 27-01-2020 | 2:58 PM
Colombo (News 1st) சீனாவில் கொரோனா வைரஸ் (Coronavirus) தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, சீனாவில் வைரஸ் பரவும் அபாயமுள்ள நகரங்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது அந்நாட்டின் பல நகரங்களிலும் பரவியுள்ளதுடன் உலக நாடுகளிலும் வியாபித்துள்ளது.
பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, நேபாளம், சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, தாய்வான், தாய்லாந்து, அமெரிக்கா, வியட்நாம், கனடா மற்றும் ஹொங்கொங் உள்ளிட்ட நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் 80 பேர் உயிரிழந்துள்ளதாக ஷின்ஹுவா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 76 பேர் வுஹான் நகரைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய நால்வரும் வேறு பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
சுமார் 5,700 இற்கும் மேற்பட்டோர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 2,744 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், வைரஸ் தாக்கத்திற்குட்பட்டவர்களில் 460 இற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னரே, குறித்த வைரஸ் ஏனையவர்களுக்கு பரவுவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை கருத்திற்கொண்டு வுஹான் நகர மக்களுக்கான விசா மற்றும் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை இந்த தற்காலிகத் தடை அமுலில் இருக்குமென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, கொரொனோ வைரஸ் பரவுவதால் Lunar புத்தாண்டிற்காக வழங்கப்பட்ட விடுமுறையை நீடிப்பதற்கு சீன அரசு தீர்மானித்துள்ளது.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையினால், 2 சர்வதேச போட்டிகளை தலைமையேற்று நடத்தும் சந்தர்ப்பம் சீனாவிற்கு அற்றுப்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை 2 நாட்களுக்கு இடம்பெறவிருந்த உலக உள்ளரங்க மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் பெப்ரவரி மாதம் நடைபெறவிருந்த ஆசிய உள்ளரங்க மெய்வல்லுனர் போட்டிகளை நடத்தும் வாயப்பையே சீனா இழந்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவில் குறித்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஐவரும் சீனாவின் வுஹான் நகருக்கு சுற்றுலா மேற்கொண்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ஜலிஸ், பீனிக்ஸ், சிக்காக்கோ மற்றும் சியெட்ல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்குமென சந்தேகிக்கப்படும் 1000 பேர் தொடர்பிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.