இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

சீனாவிலுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

by Staff Writer 26-01-2020 | 2:15 PM
Colombo (News 1st) சீனாவின் சிச்சுவான் (Sichuan) பிராந்தியத்திலுள்ள இலங்கை மாணவர்கள் 150 பேரை எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் அவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையூடாக அறிவித்துள்ளது. இதேவேளை, நெய்ஜிங்கில் வசிக்கும் மேலும் 30 பேர் தொடர்பில் தகவல்கள் தூதரகத்திற்கு கிடைத்துள்ளன. அவர்களையும் நாட்டிற்கு உடனடியாக அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனைத்தவிர, கொரோனா வைரஸ் பரவும் வுஹான் மற்றும் சிச்சுவான் பிராந்தியங்களில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். சீனாவிலுள்ள அனைத்து இலங்கையர்கள் தொடர்பிலான தரவுகளை சேகரிப்பதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். தூதரகத்திற்கும் இலங்கையர்களுக்கும் இடையில் WE CHAT ஊடாகவே தகவல்கள் பறிமாற்றப்படுகின்றன. சீனாவிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் அனைவரும் விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். எவரேனும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தால், குறித்த நபர் அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார். அத்துடன் அவரின் இரத்த மாதிரி மற்றும் சிறுநீர் மாதிரி ஆகியன பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்படும். இதேவேளை, தற்போதுள்ள சுகாதார நிலைமை மற்றும் எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நோயை அடையாளம் காண்பதற்கான மருத்துவ உபகரணங்கள் அல்லது இரசாயனப் பொருட்களைக் கொண்டுவர வேண்டுமாயின் விமானம் மூலம் அதனை நாட்டிற்கு கொண்டு வருமாறு தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மருத்துவ பரிசோதனைப் பிரிவு தெரிவித்துள்ளது.