மனோ கணேசனிடம் வாக்குமூலம் பதிவு 

விபரக்கோவை திரட்டை தடுத்தமைக்காக மனோ கணேசனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு 

by Staff Writer 25-01-2020 | 3:44 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட விபரக்கோவை திரட்டின் போது, அதனை தடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே மனோ கணேசனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். விபரக்கோவை திரட்டை தடுத்தமையூடாக ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளியை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாமல் போனதை ஏற்றுக்கொள்கின்றீர்களா என குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தம்மிடம் வினவியதாக மனோ கணேசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் கொட்டாஞ்சேனை, வௌ்ளவத்தை, பம்பலப்பிட்டி, மட்டக்குளி, முகத்துவாரம், கொள்ளுப்பிட்டி, தெஹிவளை, கல்கிசை, கிருலப்பனை, தெமட்டகொட, மருதானை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் வத்தளை, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலும் தகவல்கள் திரட்டப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் தமிழ் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இந்த கைங்கரியத்தை தாம் தொடர்ந்தும் தடுத்து நிறுத்தியதாக விசாரணை அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸாரால் சேகரிக்கப்படும் விபரக்கோவை மூன்றாம் தரப்பு சமூக விரோதிகளிடம் சென்றடைவதாக தாம் சந்தேகிப்பதாக இதன்போது விசாரணை அதிகாரிகளிடம் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளாது தமிழ் மக்களை இலக்கு வைத்து வீடு வீடாக சென்று விபரங்களைத் திரட்ட வேண்டாம் என தாம் ஏற்கனவே வலியுறுத்தியதாகவும் இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அமைச்சரவையிலும் விவாதித்து தீர்வு காணப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் வழங்கிய வாக்குமூலத்தில் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்று நான்கு மாதங்களின் பின்னரே பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சந்தேகநபர்கள் ஜனவரி மாதம் கொழும்பில் தங்கியிருந்திருப்பார்கள் என கூறுவது நம்ப முடியாத பழிவாங்கல் சிந்தனை எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் இந்திய புலனாய்வுத் துறையினர் துல்லியமான விடயங்களை வழங்கிய போதும், இலங்கை பொலிஸாரால் சந்தேகநபர்களை முன்கூட்டியே கைது செய்யவும் சம்பவத்தை தடுத்து நிறுத்தவும் முடியாமல் போனதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தங்களின் தவறுகளை மறைப்பதற்கு பழிவாங்கும் நோக்குடன் தம்மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டப்படுவதாகவும் தாம் வாக்குமூலம் அளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.