தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்தியா பயணம்

பொதுத்தேர்தல் அண்மித்துள்ள நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்தியா பயணம்

by Staff Writer 25-01-2020 | 7:26 PM
Colombo (News 1st) நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்திய விஜயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளதாகவும் இந்திய அரசியல் பிரதிநிதிகள் சிலரை சந்திப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து பிரிந்து, தமிழ் தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவாகும். இதேவேளை, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். எனினும், இந்த விஜயம் தனது தனிப்பட்ட விஜயம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டாக களமிறங்குவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ் தேசியக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் ஆகியன பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால், மீண்டும் கூட்டமைப்பில் இணைவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்திருந்தார்.

ஏனைய செய்திகள்