நாட்டு மக்களின் பில்லியன் கணக்கான பணம் அழிக்கப்பட்டமைக்கு பொறுப்புக்கூறுவது யார்?

by Staff Writer 25-01-2020 | 9:17 PM
Colombo (News 1st) 2002 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையான முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய ஐந்து தடயவியல் கணக்காய்வு அறிக்கைகள் இதுவரை வௌியாகியுள்ளன. மத்திய வங்கியின் முன்னாள் மற்றும் தற்போதுள்ள அதிகாரிகள் முறிகளின் முதன்மை கொள்வனவாளர்களுக்கு இடையில் நீண்ட காலமாகவுள்ள தொடர்புகள் மற்றும் நம்பிக்கைக்கு இடையிலான முரண்பாடு ஐந்தாவது அறிக்கையில் வௌிப்படுகின்றது. இது மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை வகித்தவர்களிலிருந்து கீழ்மட்ட ஊழியர்கள் வரை வியாபித்திருந்த வலைப்பின்னல் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் கண்காணிப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் தமது சேவையை நிறைவு செய்த பின்னர், முதன்மை கொள்வனவாளர்களின் நிறுவனங்களில் பதவி வகித்துள்ளமை இதற்கு ஓர் உதாரணமாகும். அத்துடன், அவர் தம் உறவினர்களும் முதன்மை கொள்வனவாளர்களின் நிறுவனங்களில் உயர் பதவிகளில் கடமையாற்றியதாக தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் சாட்சியங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால், அர்ஜூன் மகேந்திரனின் உறவினர்கள், முதன்மை கொள்வனவாளர்களின் நிறுவனங்களில் பணிப்பாளர் போன்ற உயர் பதவிகளை வகித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிறுவனத்தின் உரிய நடைமுறைகளை மீறி, தமது தனிப்பட்ட இலாப நோக்கு குறித்து சிந்தித்து, சுமார் இரண்டு தசாப்த காலமாக நாட்டு மக்களின் பில்லியன் கணக்கான பணம் அழிக்கப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியது யார்?