தமிழகத்தில் இலங்கை இளைஞர்கள் இருவரிடம் விசாரணை

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கை வர முயன்ற இரு இளைஞர்களிடம் Q பிரிவு பொலிஸார் விசாரணை

by Staff Writer 25-01-2020 | 4:21 PM
Colombo (News 1st) தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்ற இரு இளைஞர்களிடம் கடந்த இரு நாட்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் இராமேஸ்வரத்திலுள்ள தனியார் விடுதியில் இலங்கையை சேர்ந்த ஐவர் தங்கியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் Q பிரிவு பொலிஸார் அங்கு சென்றதாக அங்குள்ள நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இதற்கமைய, அந்த ஐவரும் இராமநாதபுரம் Q பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா - இலுப்பைக்குளம், மன்னார் - அடம்பன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மேலும் மூவர் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் தங்கிருந்த இவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்தனர். கும்மிடிப்பூண்டி முகாமில் அகதியாக இருந்த மூவரும் விசாரணைகளின் பின்னர் மீண்டும் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.