கலந்துரையாடலுக்கு அறிவித்தல் கிடைக்கவில்லை  

கூட்டமைப்புடனான கலந்துரையாடலுக்கு உத்தியோகப்பூர்வ அறிவித்தல் கிடைக்கவில்லை - மனோ கணேசன்

by Staff Writer 25-01-2020 | 6:32 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான கலந்துரையாடலுக்கு இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவித்தல் கிடைக்கவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. இது தொடர்பிலான கலந்துரையாடல் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கொழும்பில் அண்மையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளை உறுப்பினர்களினதும் கட்சி ஆதரவாளர்களினதும் கருத்துக்கள் ஆராயப்பட்டதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளைத் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கூறினார். அதனையடுத்து, கொழும்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மை கட்சி என்ற வகையில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் கலந்துரையாட தீர்மானித்ததாக அவர் தெரிவித்தார். இந்த விடயம் சம்பந்தமாக தன்னுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனக்கு தெரிவித்ததாகவும் எனினும், உத்தியோகப்பூர்வமாக இதுவரை அறிவித்தல் கிடைக்கவில்லை எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.