by Bella Dalima 25-01-2020 | 5:14 PM
Colombo (News 1st) துருக்கியில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
கட்டட இடிபாடுகளில் சிக்கிய 39 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 20 பேர் வரையில் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு அண்டை நாடுகளான சிரியா, லெபனான் மற்றும் ஈரானிலும் உணரப்பட்டுள்ளது.
துருக்கியின் கிழக்கில், தலைநகர் அங்காராவில் இருந்து 750 கிலோமீட்டர் தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாகப் பதிவாகியுள்ளது. அருகில் உள்ள 4 மாகாணங்களிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக எலாஜிக் மற்றும் மலாத்யா மாகாணங்களில் ஏராளமான வீடுகளும் கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.