காணாமற்போனவர்கள் யாரால் கொல்லப்பட்டார்கள்?

காணாமற்போனவர்கள் யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதை ஜனாதிபதி கூற வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

by Staff Writer 24-01-2020 | 8:33 PM
Colombo (News 1st) காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்த கருத்து குறித்து தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடமாகாண முன்னாள் முதல்வருமான சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பில் ஜனாதிபதி கூற வேண்டுமென அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இறந்தவர்களை தம்மால் மீண்டும் கொண்டுவர முடியாது எனவும் அவர்களுக்கான மரண சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் எதிர்பார்ப்புகள், துயரங்கள் என எதனையும் கவனத்திற்கொள்ளாமல் ஜனாதிபதி சர்வசாதாரணமாகக் கூறியிருப்பதாக சி.வி. விக்னேஸ்வரன் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி இடும் நோக்கத்துடன் தனக்கு தெரிந்த உண்மைகளின் அடிப்படையில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என ஜனாதிபதி கூறியுள்ளதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதி எதிர்பார்ப்பது போல இந்தச் செய்தி “யுத்தத்தின் பொறுப்புக்கூறல்” விதிமுறைகளுக்கு அமைவானதாக இல்லை என வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். காணாமற்போனோரை இராணுவத்தினரிடம் கையளித்த பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்ற நிலையில், அவர்கள் எவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக அறியக்கிடைக்கவில்லை என சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 20,000-க்கும் அதிகமான மக்கள் காணாமற்போயுள்ளமை அனைவரும் அறிந்த விடயம் என்பதுடன் அவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டார்கள் என ஜனாதிபதி கூறியுள்ளமையினூடாக இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார். இதனை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என தாம் கோருவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போது காணாமற்போனவர்கள், யுத்த வலயத்திற்கு அப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தில் பொறுப்புள்ள அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று அவர்களிடம் சரணடைந்தவர்கள் அல்லது பெற்றோர் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என காணாமற்போனவர்களில் மூன்று வகையினர் காணப்படுவதாக அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி இறந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்திற்கும் மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றினூடாக தௌிவுபடுத்தப்பட வேண்டுமென சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய செய்திகள்