by Staff Writer 24-01-2020 | 7:56 PM
Colombo (News 1st) ஓய்வுபெற்ற சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்னவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கனேபொல இன்று உத்தரவிட்டார்.
மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலத்துங்க தொடர்பிலும் அவரின் வழக்குத் தீர்ப்புகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைத்து, நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள முன்னாள் நீதவான் திலின கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் ஏற்கனவே விசாரணைக்குட்படுத்தப்பட்ட வழக்குகள் தொடர்பில் ஊடகங்கள் முன்னிலையில் விமர்சித்து, நீதிமன்றத்தை அஜித் பிரசன்ன அவமதித்துள்ளதாக சுட்டிக்காட்டி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேல் நீதிமன்றத்தில் முறைப்பாடு முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தம்மிக்க கனேபொல, சந்தேகநபரை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி, உளநல மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஊடக சந்திப்பில் சந்தேகநபரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு அமைய, பொறுப்புக்களை நிறைவேற்றும் செயற்பாட்டிற்கு அழுத்தம் விடுத்துள்ளமை புலப்படுவதாகவும் அதன் ஊடாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளமை தெளிவாவதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெற்று, அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முறைப்பாடு தொடர்பில் விசாரணை இடம்பெற்றபோது, ஊடக சந்திப்பில் சந்தேகநபரால் முன்வைக்கப்பட்டிருந்த சில கருத்துக்கள் எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டாரவினால் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த கருத்துக்களின் ஊடாக முழுமையான நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை மற்றும் கௌரவத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனக்க பண்டார, சந்தேகநபரை பிணையில் விடுவிப்பதன் ஊடாக விசாரணைகள் மற்றும் சாட்சியங்களுக்கு அழுத்தம் விடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதேவேளை, மற்றுமொரு வழக்கு தொடர்பில் அஜித் பிரசன்னவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்படும் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கு தொடர்பில், ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து சாட்சியாளர்களுக்கு அழுத்தம் விடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் அவரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.