ஷாருக்கான் மீது குண்டுத் தாக்குதல்: ரஞ்சன் ராமநாயக்கவின் குற்றச்சாட்டிற்கு உதய கம்மன்பில பதில்

by Bella Dalima 23-01-2020 | 8:41 PM
Colombo (News 1st) நடிகர் ஷாருக்கான் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்த கருத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று பதிலளித்தார். ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்தை அடுத்து, ஷாருக்கான் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொண்டது தாம் தான் என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வௌியாவதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார். ரஞ்சன் ராமநாயக்கவின் உரையில் 6 பொய்கள் உள்ளதாகவும் அவர் மூலம் பிடிபட்ட திருடர்கள் யாரும் இல்லை எனவும் உதய கம்மன்பில தெரிவித்தார். தமது வழக்கொன்றிற்காக தொல்க முதலாளிக்கு சாராய போத்தலொன்றை இலஞ்சமாக வழங்கியமை, தமது வழக்கொன்றிற்காக நீதிபதியொருவருடன் உரையாடியமை, நீதிபதியின் சேவைக் காலத்தைப் பொருட்படுத்தாமல் பதவி உயர்வு வழங்க சூழ்ச்சி செய்தமை, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக பொலிஸார், நீதிபதிகளுடன் சூழ்ச்சி செய்தமை, தனது காதலிக்கு கடன் வழங்கிய ஒருவருக்கு அமைச்சுப் பதவியை பயன்படுத்தி மீள கடனை கோராதிருப்பதற்கு அழுத்தம் விடுத்தமை, இவையே குரல் பதிவுகளிலுள்ள உண்மையான விடயங்கள் என உதய கம்மன்பில கூறினார். மேலும், அவரின் செயற்பாடுகள் திருடர்களைப் பிடிக்கும் செயற்பாடுகள் அல்லவெனவும் அவரே திருடன் எனவும் உதய கம்மன்பில குற்றம் சாட்டினார்.