மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 23-01-2020 | 7:30 AM
Colombo (News 1st) கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா அகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மக்களுக்கு மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த பகுதிகளில் நேற்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியதாக நிறுவகத்தின் மண்சரிவு தொடர்பான ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். இதற்கமைய, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல, பல்லேகம மற்றும் வில்கமுவ பிரதேச செயலகங்களிற்கு உட்பட்ட பகுதிகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று (23) இரவு 8.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர சுட்டிக்காட்டியுள்ளார். மழையுடன் கூடிய வானிலையால் மிகவும் அவதானமாக செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை, மாத்தளை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் கம்பஹா மாவட்டத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பொத்துவில்லிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக காலியிலிருந்து கொழும்பு வரையான கடற்பிராந்தியங்கள் உள்ளிட்ட சில கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக இருக்குமென்பதால் கடற்றொழில் நடவடிக்கைகளில் அவதானமாக செயற்படுமாறு மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.